பல கோடி ரசிகர்களை தனது ஸ்டைலில் கட்டி போட்டு இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கியுள்ள அண்ணாத்த படத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், ஜாக்கி ஷெராப், சூரி, ஜார்ஜ் மரியான் ஆகியோர்  நடித்துள்ளனர்

வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக திரையரங்குகள் அனைத்தையும் திருவிழாவாக மாற்றுகிறார் அண்ணாத்த. மேலும் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா நேருக்கு நேர் மோதும் அதிரடி ஆக்ஷன் படமான எனிமி திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நற்செய்தியாக அமைந்தது முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் புதிய அறிவிப்பு. முன்னதாக கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 50% இருக்கைகளோடு திரையரங்குகள் செயல்பட்டு வந்த நிலையில் முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த புதிய அறிவிப்பில் கொரோனா கட்டுப்பாடில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி வருகிற நவம்பர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகள் அனைத்தும் 100% இருக்கைகளோடு செயல்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்ணாத்த & எனிமி ஆகியப்படங்களின் வெற்றிக்கு இது மிகவும் ஊக்கமாக  அமைந்துள்ளது.