என்னை பிடிக்கலனா ஏதாவது எழுத தான் செய்வாங்க.. எதிர்மறை விமர்சனங்களுக்கு நயன்தாராவின் ரியாக்ஷன்!
By Anand S | Galatta | December 22, 2022 13:59 PM IST

தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகியாகவும் பல கோடி இந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயின்களில் ஒருவராகவும் வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது பாலிவுட்டிலும் களமிறங்குகிறார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.
முன்னதாக ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஹாரர் திரைப்படமான மாயா படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் அடுத்த ஹாரர் திரைப்படமாக நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் கனெக்ட். நயன்தாராவுடன் சத்யராஜ், அனுப்பம் கெர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கனெக்ட் படத்தில் வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்க, மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில், கனெக்ட் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். இடைவேளை இல்லாத முழு நீள 99 நிமிட திரைப்படமாக வெளிவரும் கனெக்ட் திரைப்படம் இனுற் டிசம்பர் 22-ம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது
இதனிடையே பிரபல தொகுப்பாளர் DD (எ) திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கனெக்ட் திரைப்படம் குறித்தும் தனது திரையுலக பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு நயன்தாரா பதிலளித்துள்ளார். அந்த வகையில் தன் மீது எழும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
“இப்போதும் பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன்… என்னுடைய லுக்கிலிருந்து... இப்போது சமீபத்தில் கூட கனெக்ட் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் இருந்து என்னுடைய ஒரு சோகமான புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பக்கத்தில் சோகமான ஒரு ஸ்மைலி வைத்திருக்கிறார்கள்… அது சோகமான காட்சி தான் ஒரு சோகமான காட்சியில் நான் எப்படி பளிச்சென்று இருக்க முடியும்... இதே போல் வேறு ஒரு நடிகை ஏதோ ஒரு பேட்டியில் பேசும்போது ஒரு மருத்துவமனை காட்சியில் நான் மிகவும் நன்றாக தலை எல்லாம் வாரி அழகாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்... மருத்துவமனை காட்சி என்பதற்காக நான் தலைவிரி கோலமாக இருக்க முடியுமா? அதேபோல் அந்த திரைப்படம் எதை டிமான்ட் செய்கிறதோ அதை தானே நான் செய்ய வேண்டும்... நான் உடல் இழைத்தால் மிகவும் இழைத்து விட்டேன் என்று சொல்கிறார்கள். ஒருவேளை உடம்பு போட்டால் உடம்பு போட்டு விட்டேன் என்று சொல்கிறார்கள். நான் என்ன செய்தாலும் ஏதோ ஒன்று சொல்லப் போகிறார்கள். மேலும் என்னை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் ஏதாவது ஒன்றை எழுதத் தான் போகிறார்கள். அது என்னுடைய மைண்டுக்கோ இதயத்திற்கோ செல்லாது. ஆனால் என் காதல் விழும் நான் பார்ப்பேன் ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். அவர்களை நினைக்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு இவ்வளவு நேரம் இருக்கிறது என்னைப் பற்றி யோசித்து இதனை எழுதுவதற்கு, நமக்கு தான் நேரமில்லை அதனால் அதைப் பற்றி நான் யோசிப்பதில்லை” நயன்தாரா தெரிவித்துள்ளார். நயன்தாராவின் அந்த முழு பேட்டி இதோ…