தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜயின் அடுத்த பிரமாண்ட படைப்பாக தயாராகிறது தளபதி 67 திரைப்படம். விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் தளபதி 67 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே முதன்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிப்பில்,செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் முதல்முறையாக தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னணி இசை கலைஞர் டிரம்ஸ் சிவமணி அவர்கள் வாரிசு திரைப்படத்திற்காக அட்டகாசமான ஒரு பாடலுக்கு தான் வாசித்துள்ளதாக தெரிவித்தார். மிகவும் பிரம்மாண்டமான அந்த பாடலை யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் வாசித்ததாக தெரிவித்த ட்ரம்ஸ் சிவமணி நடைபெறவிருக்கும் வாரிசு இசை வெளியிட்டு விழாவிலும் அந்த பாடலை இசைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை இந்த பாடல் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது எனவும் ட்ரம்ஸ் சிவமணி தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.