இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். தொடர்ந்து மௌனராகம், அக்னிநட்சத்திரம், ஊமைவிழிகள், வருஷம் 16, கிழக்கு வாசல் என பல திரைப்படங்களில் நடித்து நவரச நாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் கார்த்திக் கடைசியாக தமிழில் நடிகர் கார்த்தி நடித்த தேவ் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தீ அவன் & அந்தகன் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் போயஸ் கார்டனில் வசிக்கும் நடிகர் கார்த்தி வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதனால் காலில் பலத்த காயம் ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் துடித்த நடிகர் கார்த்திக் உடனடியாக அடையாரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்த பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் கார்த்திக்குக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே காலில் தற்போது மீண்டும் அடிபட்டுள்ளதால் அந்த எலும்பில் தற்போது சிறிய விரிசல் ஏற்பட்டது ஸ்கேனில் தெரியவந்துள்ளது. எனவே மருத்துவர்கள் நடிகர் கார்த்திக் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் என தகவல்கள் வெளியாகி வருகிறது.