மிருகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ஆதி,தொடர்ந்து இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவான ஈரம் மற்றும் அய்யனார் , ஆடு புலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான அரவான் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக ஆதி தமிழில் நடித்த மரகத நாணயம் மற்றும் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளிலும் சமந்தா கதாநாயகியாக நடித்து வெளிவந்த யூ-டர்ன் ஆகிய  படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக கிளாப் என்னும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆகாங்க்ஷா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். 

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் கிளாப் திரைப்படத்தை இயக்குனர் பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ளார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் I.B.கார்த்திகேயன் உடன் இணைந்து ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் & சர்வானந்த் ராம் சினிமாஸ் தயாரிப்பாளர்கள் P.பிரபா, பிரேம், மனோஜ் மற்றும் ஹர்ஷா உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

தடகள விளையாட்டை மையப்படுத்தி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியிருக்கும் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான கிளாப் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்நிலையில்  கிளாப் திரைப்படத்தின் ஆடியோ உரிமைகள் அனைத்தையும் லஹரி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. விரைவில் கிளாப் படத்தின் டீசர் மற்றும் இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .