மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீஸான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

கர்ணன் படத்தில் தனுஷை அடுத்து நடிப்புக்காக அதிகமான பாராட்டுகளை பெற்றவர் என்றால் அது நட்டி நட்ராஜ் தான். போலீஸ் அதிகாரி வேடத்தில் திறம்பட நடித்திருந்தார். நட்டியின் வில்லன் நடிப்பைப் பார்த்த பலரும் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு திட்டியிருக்கிறார்கள். நடிப்பை உண்மையென நினைத்து ஒருவர் திட்டினால் சம்பந்தப்பட்ட நடிகருக்கு அது பாராட்டு. 

அவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கிறார் என்று அர்த்தம். ஒன்றிரண்டு பேர் திட்டினால் பரவாயில்லை. ஒரு படையே திட்டினால்...? போனை எடுத்தால் தானே திட்டுவீர்கள் என எடுக்காமல் விட்டால், திட்டி மெசேஜ் அனுப்புகிறார்களாம்.

இதற்கு பதில் சொல்லும் விதமாக, என்னை திட்டாதீங்க எப்போவ்... ஆத்தோவ்... அண்ணோவ்... கண்ணபிரானா நடிச்சுதான்யா இருக்கேன். போன் மெசேஜ்ல திட்டாதீங்கப்பா... முடியலைப்பா... அதுவெறும் நடிப்புப்பா... ரசிகர்களுக்கு எனது நன்றி என்று நட்டி ட்விட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்ணன் படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் ஒரு துளிதான் நட்டிக்கு கிடைத்துவரும் திட்டுகள்.

திரையில் காண்பதை நிஜம் என்று கருதும் போக்கு, ரசிகர்களிடம் அதிகம். எம்ஜிஆர், நம்பியார் சண்டையில், கையில் கத்தியில்லாமல் நிற்கும் எம்ஜிஆரை பார்த்து, வாத்தியாரே கத்தியை பிடிச்சுக்கோ என்று திரையை நோக்கி கத்தியை வீசிய சம்பவம் ஓர் உதாரணம். எம்ஜிஆர் முதலமைச்சரானது, முன்னணி நடிகர்களுக்கு அரசியல் தளத்தில் இருக்கும் வரவேற்பு இவையெல்லாம் திரையில் காணும் பிம்பத்தை நாம் நிஜமென கருதுவதன் பிரதிபலிப்பு.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நெகட்டிவ் ரோலில் நடித்த போதும், ரசிகர்கள் மத்தியில் கோபம் இருந்ததாம். இதை பல இடங்களில் அவரே கூறியிருக்கிறார்.