இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராகவும் பல கோடி கிரிக்கெட் ரசிகர்களின் ஃபேவரட் கிரிக்கெட்டராகவும் திகழ்ந்த கேப்டன் COOL மகேந்திர சிங் தோனி அவர்கள் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக வலம் வருகிறார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து உலக அளவில் திரை பிரபலங்களுக்கு சமமாக அதிக ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் மகேந்திர சிங் தோனி.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் நிலையில், விரைவில் அடுத்த சில ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தோனி தனது தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அந்த வகையில் நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படத்தை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இதற்காக தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவியாளராக பணியாற்றிய சஞ்சய் என்பவர் பணியாற்றவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது போன்ற செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது பக்கத்தில், “தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தில் சஞ்சய் என்ற பெயரில் யாரும் பணியாற்றவில்லை” என்றும் “இது போன்ற போலியான தகவல்களை நம்ப வேண்டாம்” என்றும் தெரிவித்துள்ளது. “திரைப்படத் தயாரிப்பு குறித்து அற்புதமான திட்டங்களை உருவாக்கி வருகிறோம்… இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் பகிர்ந்து கொள்வோம்” என்றும் தெரிவித்துள்ளனர். தோனி என்டர்டெயின்மென்ட்டின் அந்த பதிவு இதோ…