நடிகர் பிரகாஷ்ராஜ் கால்பட்ட இடத்தை கோமியத்தால் கழுவிய கல்லூரி மாணவர்கள்..! – கடும் எதிர்ப்புகளுடன் இணையத்தில் வைரலாகும் வீடியோ..

பிரகாஷ் ராஜ் வந்து சென்ற கோமியத்தால் கழுவிய மாணவர்கள் - College students clean campus with cow urine after Actor Prakash raj visit | Galatta

இந்திய சினிமாவில் சிறந்த திரை கலைஞர்களில் ஒருவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழ் சினிமாவில் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘டூயட்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர் தொடர் சிறந்த வில்லனாகவும் சிறந்த குணசித்திர நடிகராகவும் சிறந்த கதை நாயகனாகவும் படத்திற்கு படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து இந்தியாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஐந்து முறை தேசிய விருதுகளையும் ஏழு முறை தமிழ் நாடு அரசு மாநில விருதினையும் எட்டு முறை நந்தி விருதினையும் மற்றும் பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக பல படங்களில் கவனத்தை ஈர்த்ததையடுத்து இயக்குனராகும் பல முக்கிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

இவரது நடிப்பில் இந்த ஆண்டு, வாரிசு, பொன்னியின் செல்வன் 2 ஆகிய திரைப்படங்கள் தமிழில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. தொடர்ந்து மேலும் பல படங்களில் பிரகாஷ் ராஜ் தற்போது நடித்து வருகிறார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைக் கலைஞராக மட்டும் இல்லாமல் சமூதாய பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவருமாய், சமூக ஆர்வலருமாகவும் அரசியல் வாதியாகவும் நடிகர் பிரகாஷ் ராஜ் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிவமேகாவில் உள்ள தனியார் கல்லூரியில் தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் என்ற தலைப்பில் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்து கொண்டார்.

இதையடுத்து பிரகாஷ் ராஜின் கொள்கைக்கு எதிரானவர் சிலர் மற்றும் கல்லூரிக்கு தொடர்பில்லாதவர்கள் கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் பிரகாஷ் ராஜ் கல்லூரிக்குள் நுழைய கூடாது எனவும்  ஆர்பாட்டம் நடத்தினர். பின் போலீஸ் பாதுகாப்புடன் பிரச்சனை தடுக்கப்பட்டது. அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடித்து விட்டு சென்று விட்டார். அதன்பின் சில கல்லூரி மாணவர்கள் பசுமாட்டின் கோமியம் கொண்டு பிரகாஷ் ராஜ் சென்ற இடங்களில் தெளித்து சுத்தம் செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவ, இதையடுத்து ரசிகர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இணையத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சம்மந்தப் பட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்தை குறிப்பிட்டு ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.