பிரபல மலையாள நடிகராக வலம் வரும் நடிகர் சுஜித் ரவி கடந்த 2005 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த மயூகம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து தமிழ் & மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமடைந்த ஸ்ரீஜித் ரவி தமிழில் இயக்குனர் பிரபுசாலமனின் கும்கி, இயக்குனர் லிங்குசாமியின் வேட்டை, இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் மத யானைக்கூட்டம், இயக்குனர் பாண்டிராஜின் கதகளி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே தற்போது நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளிவந்துள்ளன. மலையாளத் திரையுலகின் பிரபல நடிகரான டி.ஜி.ரவியின் மகனான ஸ்ரீஜித் ரவிக்கு சஜிதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

கேரளாவின் திருச்சூர் பகுதியை சார்ந்த நடிகர் ஸ்ரீஜித் ரவி ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு பாலக்காட்டில் பள்ளி மாணவர்களிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபடும் விதமாக பாலியல் தொடர்பான உடல் பாகங்களை காட்டியதாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சூரில் உள்ள பூங்காவிற்கு வந்த நடிகர் ஸ்ரீஜித் ரவி அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகளிடம் மீண்டும் பாலியல் தொடர்பான தனது உடல் பாகங்களை காட்டி அத்துமீறியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.