இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த நடிகை குஷ்பூ தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், நவரச நாயகன் கார்த்திக், இளைய திலகம் பிரபு, சத்யராஜ், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என முன்னணி நட்சத்திர நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குஷ்பூ நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த நடிகை குஷ்பூ சின்னத்திரையிலும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் நடுவராகவும் கலந்துகொண்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக தமிழில் பல மெகா தொடர்களில் நடித்து சீரியல் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர்.

மேலும் தயாரிப்பாளராகவும் சினிமாவில் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள குஷ்பூ கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வெளிவந்த அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து நடிகை குஷ்பூ நடிக்கும் புதிய மெகா தொடர் இன்று(பிப்ரவரி 14-ம் தேதி) தொடங்கியது.

முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள மீரா மெகா தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பு நடிக்கிறார். மேலும் இந்த மெகா தொடரில் கதாசிரியராகவும் குஷ்பூ பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீரா மெகா தொடரின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. மீரா மெகா தொடரின் பூஜை புகைப்படங்கள் இதோ...