இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ சூர்யா இணைந்து நடித்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் X திரைப்படம் கடந்த நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி வெளியீடாக ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு சிறப்பு நேர்காணலில் பேசிய கார்த்திக் சுப்பராஜ் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில், “நீங்கள் நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள் ஒரு காட்சிக்கு அதற்கான நேரத்தை கொடுக்கிறீர்கள்... நீங்கள் ஷூட் பண்ணும் விதமே அப்படித்தான் இருக்கிறது இது எடிட்டில் செய்யப்படவில்லை... நீங்கள் அதை ஷூட் செய்யாமல் எடிட்டே செய்ய முடியாது. ரசிகர்களுக்கு இவ்வளவு பெரிய படம் என்பது அவர்களுக்கு நிற்குமா ரசிகர்கள் பார்ப்பார்களா அல்லது படம் LAG என சொல்வார்களா என்பதெல்லாம் இருக்கிறது. அவ்வளவு நேரம் கொடுப்பதற்கு உங்களுக்கு எப்படி நம்பிக்கை வருகிறது?” எனக் கேட்டபோது,
“அப்படி ஒரு எண்ணம் இருந்தது. ஜிகர்தண்டா முதல் பாகம் எடுத்துக் கொண்டாலும் அதுவும் ஒரு நீளமான படம் தான். அதுவும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு படம் தான். படம் எடுத்து எடிட் செய்து பார்க்கும் போது இந்த உலகமும் இந்த கதாபாத்திரங்களும் தெளிவாக காண்பிக்கப்பட்டது என்பதைப் பார்த்துவிட்டு… இறைவி படம் எடுத்துக் கொண்டாலும் சில காட்சிகளை பார்த்த பிறகு சரி இது கதைக்கு தேவைப்படுகிறது அப்படியே விட்டு விடுவோம் என வைத்து விடுவேன். நான் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பற்றி யோசிப்பதில்லை. இந்த கேரக்டர் புரியவில்லை என ஒரு ரசிகர் பார்வையில் இருந்து எந்தவிதமான விமர்சனமும் வந்ததில்லை. இறைவி படத்திற்கு அதற்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அது நன்றாக இருக்கிறது என்கிறார்கள். பேட்ட படம் கூட நீளமான படம் தான். ஜகமே தந்திரம் படத்தில் மட்டும் தான் சுருளி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, இன்னும் பெரிய ஒரு இடம் இருந்தது. அந்த இரண்டு கேங்ஸர்கள் யார் என்பதை காட்டக்கூடிய ஒரு தளம் இருந்தது. அப்போது அந்த பயம் வந்தது. பயம் என்பதை விட நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு கொடுக்கும் போது அவர்கள் இதைக் குறிப்பிட்டு சொன்னார்கள் எனவே முதலில் இருந்ததை கொஞ்சம் ஃபாஸ்ட் கட் செய்தோம். அப்படி பார்க்கும் போது கொஞ்சம் பரபரப்பாக போகிறது என்று ஒரு உணர்வு வந்தது. ஆனால் இன்னொரு புறம் அது புரியாது என்பதும் மனதில் இருந்தது. அதை அந்த படத்தில் இருந்து நான் கற்றுக் கொண்டேன். எனவே படம் மெதுவாக நகர்கிறது என ரசிகர்கள் சொன்னாலும் இரண்டாவது பாதியில் பிக்கப் ஆகிவிட்டது என்றால் அது கனெக்ட் ஆகிவிடும். அதனால் இந்த படம் பண்ணும் போது மிகவும் தெளிவாக அதை கையாண்டு இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் அவர்களின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட 20 - 25 நிமிடங்கள் கழித்து தான் வரப்போகிறது என முடிவு செய்தோம். இருப்பினும் அந்த ராகவா லாரன்ஸ் கதாபாத்திரத்தை முன்பே அறிமுகப்படுத்தி கொஞ்சம் ஃபாஸ்ட் கட் செய்து ஒரு வெர்ஷன் எடுத்து போட்டு பார்த்தோம். எங்களுடைய சவுண்ட் டிசைனர் குணால் பார்த்துவிட்டு முதல் பாதி எனக்கு புரியவே இல்லை என்று சொன்னார். எனவே கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு கதையை சொல்லி விட்டால் அதன் பிறகு எல்லோரும் அதற்குள் நகர ஆரம்பித்து விடுவார்கள்.” என தெரிவித்திருக்கிறார். மேலும் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.