“யார் இந்த 70 வயது அரிவாள் திருடன்!?” போலீசாருக்கு டிமிக்கி கொடுத்தவர் சிக்கியது எப்படி?

“யார் இந்த 70 வயது அரிவாள் திருடன்!?” போலீசாருக்கு டிமிக்கி கொடுத்தவர் சிக்கியது எப்படி? - Daily news

பல ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த 70 வயதான அரிவாள் திருடனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தான், இந்த 70 வயது அரிவாள் திருடன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதாவது, பட்டுக்கோட்டைமற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் கடந்த 4 மாத காலமாக தொடர்ந்து இரவு நேரங்களில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம், அரிவாளை காட்டி மிரட்டி அவர்களது தாலி செயினை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து பறித்து செல்வதாக, பாதிக்கப்பட்ட பலரும் போலீசாரிடம் புகார் அளித்து வந்தனர்.

அத்துடன், டூ வீலரில் இது போன்று தாலி செயினை பறித்துச் செல்வதுடன், அந்த பகுதிகளில் பூட்டிகிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து அங்கு தொடர்ச்சியாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதும் தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இப்படியான புகார்கள் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் அதிகம் அரங்கேறிய நிலையில், பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மக்களிடம் பெரும் பயத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பல வழக்குகளை பதிவு செய்த போலீசார், “இந்த மாதிரி, இந்த தொடர் திருட்டு சம்பவங்களில் யார் ஈடுபடுகிறார்கள்?” என்று தெரியாமல் போலீசாரும் தொடர்ந்து குழம்பி வந்தனர். 

இந்த நிலையில் தான், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வரும் அடையாளம் அந்த மர்ம நபரை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.

இப்படியான சூழலில் தான், கடந்த 2 வருடங்களாக பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த தொடர் குற்ற சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்த வழக்கு தொடர்பாக குற்றம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் நெருங்கினர்.

இது தொடர்பான விசாரணையில், பட்டுக்கோட்டை பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 70 வயதான பழனி என்கிற பழனியாண்டி என்பதை தனிப்படை போலீசார் கண்டுப்பிடித்தனர்.

முக்கியமாக, கடந்த 2 மாத காலமாக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்றைய தினம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே பழனியாண்டி நிற்பதை கண்டுப்பிடித்த தனிப்படை போலீசார், அவரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து, காவல் நிலையத்திற்க அழைத்துச் சென்றனர்.

அதன் பிறகு, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 35 வருடங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை பகுதியில் வழிப்பறி செய்து, கிட்டதட்ட 5 வழக்குகளில் கைதாகி இவர் சிறைக்கு சென்று வந்தது தெரிய வந்தது. 

அதே போல், இந்த 70 வயதான பழனி, அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த பல வருடங்களாக திருட்டு மற்றும் தொடர் கொள்ளை சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததும் உறுதி செய்யப்பட்டது. 

குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் பட்டுக்கோட்டையில் ஒரே இரவில் 4 வீடுகளுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் தாலி செயினை அறுத்து சென்ற குற்றத்திலும் இவர் தான் ஈடுபட்டது என்பதையும் போலீசார் கண்டுப்பிடித்தனர். 

மேலும், “இவர் தனி ஆளாக பல குற்றங்களில் ஈடுபட்டு வந்தாரா? அல்லது இவரது திருட்டுக்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா?” என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இந்த வழக்கில் இன்னும் பல அதிரடியான திருப்பங்கள் ஏற்படும் என்றும், போலீசார் கூறி உள்ளனர். இதனால், பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Leave a Comment