தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜீவா. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி சௌத்ரியின் மகனான இவர் தனது தந்தையின் தயாரிப்பில் வெளியான ஆசை ஆசையாய் படத்தின் மூலம் முதன்முதலில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த கற்றது தமிழ், ராம், சிவா மனசுல சக்தி, கோ உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன. கடந்த ஆண்டு ஜீவா நடிப்பில் கீ, கொரில்லா, சீறு, ஜிப்ஸி ஆகிய படங்கள் வெளியானது. ஜீவா கைவசம் 83, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. 

கடைசியாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான ரௌத்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது தந்தையின் நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் சசியிடம் உதவியாளராக பணியாற்றிய சந்தோஷ் ராஜன் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு எண் 91 எனக்குறிப்பிடப்படுகிறது. 

இப்படத்தில் ஜீவாவுடன் காஷ்மீரா பர்தேஷி, ப்ரயாகா நாக்ரா, விடிவி கணேஷ், சித்திக், ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தென் இந்திய சினிமா துறையில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு பெரும் வரலாறும்,  பெருமையும் இருக்கிறது. தென்னக சினிமாவிற்கு  பல தரமான கலைஞர்களை அந்நிறுவனம் தந்திருக்கிறது. குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் வகையிலான படைப்புக்களை, உலக ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம், தொடர்ந்து தந்து வருகிறது. 

நடிகர் ஜீவாவுடன் இணையவுள்ளது குறித்து கூறியபோது... இது எனக்கு இரட்டை சந்தோஷ தருணம், ஜீவா அவர்கள் தமிழ் சினிமாவின் அரிய திறமைகளுல் ஒருவர். அவர் மிக ஆழமான படைப்புகளில் திறமையான நடிப்பை தந்தும், கமர்ஷியல் படங்களில் எளிதாக ரசிகர்களை கவர்ந்தும் சாதனை படைத்தவர். மாஸ் மற்றும் க்ளாஸ் எனும் இரண்டு திறமையும் கொண்டவர் அவர். 

இயக்குநர் சசி அவர்களின் டிஷ்யூம் படத்தில் உதவியாளராக பணிபுரிந்த போது படப்பிடிப்பில் நடிகர் ஜீவாவின்  நடிப்பு திறமையை கண்டு வியந்திருக்கிறேன். அப்படத்தில் அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. இயல்பிலேயே  மிகவும் எளிமையான, கலகலப்பான மனிதர். சுற்றியுள்ளவர்களை தன் கலகலப்பான குணத்தால் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். 

எனது கதையையும் அப்படியானதொரு கதாப்பாத்திரத்தை கொண்டிருப்பதால் அவரை அணுகினேன். தற்போது தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக வளர்ந்து, இந்திய அளவிலான முக்கிய நடிகராக மாறிவிட்ட போதிலும், அவர் அதே எளிமையுடனே தான் பழகுகிறார். இது தான் எந்த ஒரு இயக்குநரும் அவருடன் பணிபுரிய விரும்பும் குணமாக இருக்கிறது. இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் ஆசிர்வாதம். மேலும் இப்படம் தரப்போகும்  மிகச்சிறந்த அனுபவங்களுக்காக காத்திருக்கிறேன்.