ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி பரிசோதனையில், பங்கேற்ற தன்னார்வலர் பலி
By Nivetha | Galatta | Oct 22, 2020, 11:18 am
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் பங்கேற்ற ஒரு தன்னார்வலர் பிரேசிலில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர். இது உண்மையாகும் பட்சத்தில், உலகளவில் நடைபெற்று வரும் பல்வேறு கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசி சோதனைகளில் நடந்துள்ள முதல் உயிரிழப்பு இது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்தை கண்டறியும் பணியில் உலகம் முழுக்க, அனைத்து நாடுகளும் இருந்து வருகின்றது. தடுப்பூசி பணிகளை, உலக சுகாதார நிறுவனம் கண்காணித்தும் வருகின்றது. அந்த கண்காணிப்பின் அடிப்படையில், உலக சுகாதார நிறுவனம், முன்னணியில் இருக்கும் தடுப்பூசியாக குறிப்பிடுவது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பணிகளைத்தாம்.
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி வருகின்றது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரேசில் நாட்டில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார். ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த அந்த தன்னார்வலரின் வயது 28 என்று, மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அந்த தன்னார்வலர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து பிரேசில் அரசோ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமோ, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமோ எந்த பதிலும் அளித்ததாக தெரியவில்லை. அதேபோல், தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து விசாரனை நடத்த பிரேசில் சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த விவகாரம் காரணத்தால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிரேசிலில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரையில், கொரோனா தடுப்பூசி பணியை முழுமையாக முடித்திருப்பதாக கூறியிருப்பது, ரஷ்யா மட்டும்தான். ரஷ்யா, இதுவரை இரண்டு கொரோனா தடுப்பூசியை அறிவித்துள்ளது. மூன்றாவது தடுப்பூசியையும் விரைவில் வரும் என குறிப்பிட்டுள்ளது ரஷ்யா. இரண்டு மூன்று தடுப்பூசிகளை ரஷ்யா அறிவித்து வந்தாலும், அவற்றில் ஒன்றுகூட பாதுகாப்பான தடுப்பூசி என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அடையாளத்தை பெறவில்லை. அதனாலேயே உலகம் முழுவதும் பொது மக்கள் பயன்பாட்டுக்கும் அவை வரவில்லை.
இப்படி அங்கீகாரம் பெறாத தடுப்பூசிகளை அறிவித்து வரும் ரஷ்யா, இங்கிலாந்தில் தயாராகும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சிம்பன்ஸி கொரோனா வைரஸ் பயன்படுத்தப்படுவதால், அதை போட்டுக்கொள்வோர் குரங்குகளாக மாறிவிடுவார்கள் என பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் எந்த தடுப்பூசியுமே அபாயமானதுதான் என்ற கருத்து படங்கள் மூலமும், வீடியோக்கள் மூலமும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இப்படியான கருத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் சில ரஷியாவின் பிரபல தொலைக்காட்சியிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை கொண்டிருக்கும் பிரிட்டன் நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், தடுப்பூசி பயன்படுத்தினால் குரங்காகிவிட்டது போன்ற ஒரு புகைப்படமும், உடன் ஒரு குரங்கு மற்றும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் ஆய்வக உடையில் இருப்பது போன்ற புகைப்படம் முதலான புகைப்படங்களும் ரஷியா வெளியிடப்பட்டுள்ளது.