வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், நாளுக்கு நாள் வெங்காயம் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படியான சூழலில் நேற்றைய தினம் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், வெங்காய விலையேற்றம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தொன்று தெரிவித்தார். அவர் தனது பதிவில், `நெல்மணிகள் நனைந்து விவசாயிகளும், வெங்காய விலை உயர்வால் தாய்மார்களும் கண்ணீர் விடுவதாக தெரிவித்துள்ளார். வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம் என்றும் அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை' என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ``வெங்காய விலையைக் குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வெங்காயத்தை முழுவீச்சில் கொள்முதல் செய்து, நியாயமான விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் சட்டங்கள் அமலானால், பதுக்கல் அதிகரித்து விலை எவ்வளவு வேண்டுமானாலும் உயரும். வேளாண் சட்டத்தை அ.தி.மு.க. அரசு அனுமதிக்கக் கூடாது" எனவும் வலியுறுத்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :

``சாதாரண சமையலுக்கும் பயன்படுத்தப்படும் முக்கியமான உணவுப் பொருளாம் வெங்காயத்தைப் பதுக்கியதால் இன்றைக்கு அதன் விலை, எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு, கிடுகிடுவென உயர்ந்து - தாய்மார்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஒருபுறம் விளைந்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகளின் வேதனைக் கண்ணீர். மறுபுறம், வெங்காயத்தின் தாங்க முடியாத விலை உயர்வால் தாய்மார்கள் பெருக்கிடும் கண்ணீர். இத்தகைய கண்ணீரில் களிநடம் போடுகிறது எடப்பாடி அ.தி.மு.க. அரசு.

அ.தி.மு.க. அரசு கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்போம் என்றாலும், அனைவருக்கும் வெங்காயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே! 

இப்போதே வெங்காயம் கிலோ 130 ரூபாய் வரை விற்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க. அரசு ஆதரித்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின்  வேளாண் சட்டங்கள் அமலானால் எவ்வளவு வேண்டுமானாலும் தேக்கி வைக்கலாம்; இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் விலை ஏறலாம். 

இந்த அனுபவத்திற்குப் பிறகாவது மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என்றும்; வெங்காயத்தை முழுவீச்சில் அரசு கொள்முதல் செய்து நியாயமான விலைக்கு அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கு உரிய போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்; வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். வெங்காயத்தின் மூலமாக மற்றொரு ஊழலுக்கு வழி கண்டுவிடக் கூடாது!"

இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்மூலம் அவர், "வெங்காயம் பதுக்கப்பட்டதால் அதன் விலை கிடுகிடு உயர்வு; அ.தி.மு.க. அரசு ஆதரித்த பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்கள் அமலானால் பதுக்கல் அதிகரித்து விலை எவ்வளவு வேண்டுமானாலும் உயரும். இதற்குப் பிறகாவது வேளாண் சட்டத்தை அ.தி.முக. அரசு அனுமதிக்கக் கூடாது; வெங்காய விலையைக் குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவை" என மிகத்தெளிவாக கூறியிருக்கிறார்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமைக் கடையில், ரூ.45-க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனையை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்திருந்தது, இங்கே நினைவுகூரத்தக்கது. அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது:

"பண்ணை பசுமைக் கடைகளிலும், நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளிலும் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை மேலும் அதிகரித்தால், அதனை நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு ஆண்டுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் தேவைப்படுகிறது. இதில் 4 லட்சம் மெட்ரிக் டன் சின்ன வெங்காயம். இந்த வெங்காயம் தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய 85 நாட்கள் ஆகும். பெரிய வெங்காயம் உற்பத்தி செய்ய 120-130 நாட்களாகும். தமிழக விவசாயிகள் பொதுவாக சின்ன வெங்காயத்தைத்தான் பயிரிடுகின்றனர். அதனைத் தொடர்ந்து பயிரிடலாம். திண்டுக்கல் உள்ளிட்ட 4-5 மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் 42% பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

வெங்காய விலை உயராதபடி கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2012-ல் விலை நிலைப்படுத்தல் நிதியத்தை ஏற்படுத்தினார். அதற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அந்த நிதியை மாநில கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ளோம். அதைப் பயன்படுத்தி, கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மீதான விலை உயர்வைக் கட்டுக்குள் வைக்க கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு பதுக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. தேவையான அளவு கொள்முதல் செய்துள்ளோம். 150 டன்னுக்கு மேல் வெங்காயம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம்".

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.