தர்பார் படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.

ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். 

இதையடுத்து உடல் நலம் தேறிய பின்னர் கடந்த மாதம் துவங்கிய அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்து நடிகர் ஜகபதி பாபு வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

விஸ்வாசம், ரங்கஸ்தலம், லெஜண்ட் போன்ற படங்களில் பயங்கர வில்லனாக நடித்த ஜகபதி பாபு, அண்ணாத்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு, முயற்சி செய்து தனது லுக்கை மாற்றி உள்ளாராம். இதனை அவரே சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி ஜகபதி பாபு தனது பதிவில், ரஜினி சார் படத்திற்காக முயற்சி செய்து கொடூரமான வில்லன் லுக்கை மாற்றி உள்ளேன். ஒரு வழியாக கடைசியில், அரவிந்த சமேதா படத்தின் பாசி ரெட்டி லுக்கை மாற்றி, வெற்றி அடைந்து விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி படத்தில் நடிக்கும் மூத்த நடிகரான ஜகபதி பாபுவிற்கு இந்த படம் நல்ல மாற்றத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் 2021 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jaggu Bhai (@iamjaggubhai_)