பார்க்கிங்: ஹரிஷ் கல்யாண் - MS பாஸ்கரின் விறுவிறுப்பான புதிய படம்... ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ட்ரெய்லர் இதோ!

ஹரிஷ் கல்யாண் MS பாஸ்கரின் பார்க்கிங் பட ட்ரெய்லர்,harish kalyan indhuja in parking movie trailer out now | Galatta

நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இந்துஜா இணைந்து நடித்திருக்கும் பார்க்கிங் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து கதையின் நாயகியாக பார்க்கிங் திரைப்படத்தில் இந்துஜா நடித்திருக்கிறார். மற்றொரு முன்னணி கதாபாத்திரத்தில் MS.பாஸ்கர் நடித்துள்ளார். மேலும் ராமா & பிரார்த்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பார்க்கிங் திரைப்படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவில் பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்ய, சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். 

திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து ஐடி துறையில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண் தனக்கு பிடித்த கார் ஒன்றை வாங்குகிறார். அந்த காருக்கான பார்க்கிங் கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளராக வரும் MS.பாஸ்கர் ஹரிஷ் கல்யாணின் காரை அந்த வீட்டின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்த கூடாது என்கிறார். தொடர்ந்து அங்கே கார் நிறுத்தப்படவே அவர் ஒரு புதிய காரை கொண்டு வந்து அங்கே நிறுத்த அந்த பார்க்கிங்கே பிரச்சனையாகிறது. இதை அடுத்து ஹரிஷ் கல்யாண் மற்றும் MS.பாஸ்கர் இடையிலான பார்க்கிங் சம்பந்தப்பட்ட இந்த ஈகோ காரணமாக வரும் அடுத்தடுத்த பிரச்சனைகளை பேசக்கூடிய ஒரு படமாக “பார்க்கிங்” இருக்கும் என்பது ட்ரெய்லரில் தெளிவாக தெரிகிறது. 

கடைசியாக வந்த தனது படங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு மிகவும் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். வழக்கம்போல் படத்திற்கு படம் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து மிகச் சிறப்பாக நடித்து வரும் MS.பாஸ்கர் அவர்கள் இந்த படத்திலும் ஒரு அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேயாத மான், பிகில், நானே வருவேன் படங்களுக்கு பிறகு நடிகை இந்துஜா திரை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இந்த பார்க்கிங் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் யதார்த்தமான ஒரு கதைக்களத்தில் விறுவிறுப்பான கதை சொல்லும் இந்த பார்க்கிங் படத்தின் ட்ரெய்லர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த ட்ரெய்லர் இதோ…   

 

தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணப் பெண்ணே உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனக்கென தனி இடம் பிடித்தார். கடைசியாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திரசிங் தோனி அவர்கள் முதல்முறை தயாரிப்பாளராக தனது தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்த LGM (Let's Get Married) திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அசத்தலான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் சசி இயக்கத்தில் ரொமான்டிக் திரைப்படமாக ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் நூறு கோடி வானவில் மற்றும் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் படமாக நடித்திருக்கும் டீசல் திரைப்படமும் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே சர்தார் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் உடன் இணைந்துள்ள ஹரிஷ் கல்யாண் லப்பர் பந்து எனும் புதிய திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.