கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 43-வது படமாகும். கொரோனா அச்சுறுத்தல் சமயத்தில் படத்தின் சில பாடல்களை உருவாக்கி முடித்துவிட்டது படக்குழு. தனுஷுக்கு நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. 

D43 படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லரான இந்த படத்தில் ஷரஃபு மற்றும் சுஹாஸ் திரைக்கதை எழுதுகின்றனர். மேலும் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாவதை பார்க்க முடிகிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

இரண்டு மாதம் முன்பு இப்படம் குறித்து பதிவு செய்த ஜிவி, அதில் D43 ஆல்பம் நன்றாக வந்துகொண்டிருக்கிறது என பதிவு செய்துள்ளார். விரைவில் பாடல்கள் குறித்த அப்டேட்டை பதிவு செய்கிறேன் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். சமீபத்தில் தனுஷுடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் ஜிவி. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. 

இந்நிலையில் படத்தில் மூன்று பாடல்கள் முடிவடைந்து விட்டதாக ஜிவி பிரகாஷ் பதிவு செய்துள்ளார். தற்போது நான்காம் பாடல் கம்போஸ் செய்து வருவதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார். பாடல்கள் நன்றாக உருவாகி வருவதாகவும், சாலிட்டான ஆல்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 

சமீபத்தில் தனுஷ் 44 படத்தின் அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஐந்து வருடங்களுக்கு பிறகு DNA காம்போ. அனிருத் ஆன் போர்ட் என்ற செய்தி வெளியானதும் கொண்டாட துவங்கிவிட்டனர் ரசிகர்கள். தனுஷ் கைவசம் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. தற்போது ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகி வரும் அத்ரங்கி ரே படத்தின் டெல்லி படப்பிடிப்பில் நடித்து வருகிறார் தனுஷ். 

இதனைத் தொடர்ந்து ராம் குமார் இயக்கவிருக்கும் படத்திலும் தனுஷ் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.