தமிழ் திரையுலகின் பிரபல பெண் இயக்குனர்களில் ஒருவரான கிருத்திகா உதயநிதி வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான காளி திரைப்படத்தை இயக்கினார். 

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜெயராம் அவர்களின் மகனான காளிதாஸ் ஜெயராம் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமாகி பிறகு தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மலையாளம் தமிழ் மொழிகளில் நடித்து வந்த நடிகர் ஜெயராம் நெட்ஃபிலிக்ஸ்  OTT தளத்தில் வெளியான “பாவக் கதைகள்” ஆன்தாலஜி வெப்சீரிஸில் பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் எபிசோடில் சத்தார் என்ற கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

“பாவக் கதைகள்” வெப்சீரிஸில் காளிதாஸ் ஜெயராம் நடித்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து இவருடைய அடுத்த திரைப்படத்திற்கான ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில் RISE EAST தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி உடன் காளிதாஸ் ஜெயராம் இணைய உள்ளார் என்று அறிவிப்பு வெளியானது.தற்போது இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர் காளிதாஸ் உடன்  இணைந்து நடிகை தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

மேலும் அங்காடித்தெரு, கோ, கோமாளி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் இந்த புதிய திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். முன்னதாக நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள மாநாடு திரைப்படத்தையும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.