வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. இதையடுத்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான காளி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில்  வரவேற்ப்பை பெற்றது. அடுத்ததாக தமிழ், மலையாளம் மொழிகளின் முன்னணி இளம் நடிகராக திகழும் நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் புதிய திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். 

இந்த புதிய திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரான ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் நடிகை தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார்.இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் வெளியானது.  

முண்டாசுப்பட்டி , சூரரைப்போற்று என்று படத்திற்கு படம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் காளி வெங்கட் மற்றும் நடிகர் கருணாகரனுடன் இணைந்து, தமிழ் திரையுலகின் மூத்த நடிகைகளான பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் விஜி சந்திரசேகர் ஆகியோர் நடிக்க உள்ளனர் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் ஆன்தாலஜி வெப்சீரிஸில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் எபிசோடில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த காளிதாஸ் ஜெயராமின் அடுத்த திரைப்படமாக உருவாகும் இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.