தமிழில் நடிகர் சிலம்பரசன் நடித்து மெகா ஹிட்டான மன்மதன் திரைப்படத்தில் மனோதத்துவ நிபுணராக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் நடிகை மந்திரா பேடி. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த சாகோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை மந்திரா பேடி . அடுத்ததாக இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வரும் அடங்காதே திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கிரிக்கெட் வர்ணனையாளராகவும் தொகுப்பாளராகவும் திகழ்ந்த மந்திரா பேடி 2003 & 2007 ஆகிய வருடங்களில் கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட போட்டிகளையும் தொகுப்பாளராக இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.  பேஷன் டிசைனராக மாடலிங் துறையிலும் நடிகை மந்த்ரா பேடி வலம் வந்துள்ளார். 

திரைப்பட நடிகை, தொகுப்பாளர் மட்டுமல்லாது நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தூர்தர்ஷன், Zee டிவி, சோனி டிவி, ஸ்டார் ஒன், கலர்ஸ் என பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தோணி கௌன் ஹே, ஷாடி கால் லட்டூ , ப்யார் மெய்ன் கபி கபி திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் தயாரிப்பாளர் ராஜ் கவுஷலை, மந்திரா பேடி திருமணம் செய்து கொண்டார். 

இயக்குநர் ராஜ் கவுஷல் தயாரிப்பாளராகவும் மை பிரதர் நிகில், ஷாடி கால் லட்டூ , ப்யார் மெய்ன் கபி கபி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ராஜ் கவுஷல் உயிரிழந்தார் என தகவல் வெளியானது. மந்திரா பேடியின் கணவரான இயக்குனர் தயாரிப்பாளர் ராஜ் கவுஷல் மறைவுக்கு இந்திய திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.