தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை தந்து ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனராக திகழ்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை கொண்டு இந்த படம் உருவானது. தனுஷின் மாறுபட்ட நடிப்பு திரை விரும்பிகளை ஈர்த்தது. மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டீஜே ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். தாணு தயாரித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். 

தற்போது வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தகவல் வெளியானது. லாக்டவுன் நீங்கிய உடனே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன் ஸ்கிரிப்ட்டை பட்டை தீட்டி வருகிறார். 

ஒருவேளை இது வடசென்னை இரண்டாம் பாகமா இருக்குமோ என்ற கேள்வி எழுந்திருக்கும், ஆனால் இது முழுக்க முழுக்க புதிய ஸ்கிரிப்ட் என்றும் கூறப்படுகிறது. RS இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நம்மை என்டர்டெயின் செய்ய தவறியதில்லை. இந்த படத்திலும் ரசிகர்களை திருப்தி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நடிகர் சூரி வைத்து வெற்றிமாறன் உருவாக்கவிருக்கும் திரைப்படம் லாக்டவுன் காரணாமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு இருப்பதால், இப்போது உள்ள சூழ்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை கவனிக்க முடியாது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

நேற்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. வாடிவாசல் என்ற நாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுத்தில் 1959-ம் ஆண்டு வெளியானது.