தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகைகளுள் ஒருவர் அனுஷ்கா. அனுஷ்காவின் ரசிகர் பட்டாளத்திற்கு பஞ்சம் இல்லை என்றே கூறலாம், அந்த அளவிற்கு அவரை ரசிகர்கள் நேசிக்கின்றனர். அனுஷ்கா தற்போது ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் சைலன்ஸ் என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் அஞ்சலி, மாதவன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயல்பு நிலை மாறி திரையரங்குகள் திறக்கப்பட்டால், இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியிருக்க அனுஷ்காவின் அடுத்த படம் பற்றி ஒரு புதிய தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜோடியாக முதல் முறையாக அனுஷ்கா நடிக்க உள்ளார் என கூறப்பட்டிருந்தது. இந்த படத்தை AL விஜய் இயக்கவுள்ளார் என்றும், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்றும் செய்திகள் பரவியது. 

இச்செய்தி குறித்து கலாட்டா குழு விசாரித்த போது, அப்படியேதும் இல்லை. இச்செய்தியை நம்ப வேண்டாம். அப்படியேதும் இல்லை என்று வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெளிவாக தெரிவித்தார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது RJ பாலாஜி மற்றும் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம், கெளதம் மேனன் இயக்கியுள்ள ஜோஸ்வா இமைபோல் காக்க மற்றும் மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ ஆகிய படங்களை தயாரித்துள்ளனர். மூக்குத்தி அம்மன் மற்றும் சுமோ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. ஜோஸ்வா இமைபோல் காக்க படத்தின் ஷூட்டிங் இன்னும் நிறைவு பெறவில்லை என்பது தற்போதைய நிலையாகும். 

அனுஷ்கா மற்றும் விஜய்சேதுபதி இருவரும் முதல்முறையாக திரையில் ஜோடி சேர்கிறார்கள் என்பதால் ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியில் இருந்தனர். இச்செய்தி வெறும் வதந்தி என்று தெரிந்தவுடன் ஏமாற்றமடைந்தனர் ரசிகர்கள். 

திரையுலகில் பிஸியான நடிகர்களில் ஒருவர் நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கைவசம் பல திரைப்படங்களை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருப்பது விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம்.