மன்னார்குடி அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட 140 வீடுகளை காணவில்லை என்று, காணாமல் போன வீட்டை கண்டுபிடித்துத் தாருங்கள் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள தலையாமங்கலம் ஊராட்சியில் தான், இப்படியோ மோசடி சம்பவம் நடந்துள்ளது.

தலையாமங்கலம் ஊராட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ள 225 நபர்களுக்கு, தலையாமங்கலம் ஊராட்சியில் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 

ஆனால், 225 பேரில் 140 பேருக்கு மட்டும் வீடு கட்டி தராமல், அந்த 140 பயனாளிகளின் பெயர்களில் போலி ஆவணங்கள் தயார் செய்து, அதை வைத்து போலீயாக கணக்குக் காட்டி 5 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதே போல், மத்திய அரசின் கழிவறை கட்டும் திட்டத்திலும், சுமார் 170 நபர்களுக்குக் கழிவறைகளைக் கட்டாமலே கட்டியது போலப் பயனாளிகளின் பெயரில் போலியான ஆவணங்கள் தயார் செய்துள்ளனர் என்றும், தற்போது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. 

இந்த சர்ச்சையில், முன்னாள் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் கூட்டணி அமைத்துத் தான், இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.

அதன்படி, தலையாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஆறுமுகம், சேகர், இளவரசி, லட்சுமி உள்ளிட்ட 22 பேர்கள் சேர்ந்து, காவல் நிலையத்தில் தனித்தனியாக இந்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், “பட்டா நிலத்தில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டப் பட்டுள்ளதாக அரசு பதிவேட்டில் பதிவாகி உள்ள  நிலையில், எங்களுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப் பட்டதாகச் சொல்லப்படும் வீட்டை காணவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். 

“இதனால், எங்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும், எங்களது வீட்டை காணவில்லை என்றும், அதனால் காணாமல் போன எங்கள் வீட்டை கண்டுபிடித்துத் தருமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றும், அந்த புகாரில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனால், இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மோசடி புகார் தற்போது மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சினிமாவை மிஞ்சிய இந்த மோசடியால், தலையாமங்கலம் மற்றும் மன்னார்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.