தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் விளங்கும் நடிகர் சீயான் விக்ரம் பலவிதமான வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கோப்ரா படத்தை டிமான்டி காலனி & இமைக்காநொடிகள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.

அடுத்ததாக முதல்முறையாக தமிழ் திரை உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்கும் புதிய படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த புதிய திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்திய திரை உலகின் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமாக, ஆதித்த கரிகாலன் எனும் கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். 2 பாகங்களாக தயாராகியுள்ள  பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு கோடை வெளியீடாக ரிலீஸாக உள்ளது.

இதனிடையே நடிகர் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் நடிகர் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மகான். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள மகான் திரைப்படம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது.

மேலும் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன், சனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மகான் படத்திற்கு, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் மகான் படத்தின் டீசர் தற்போது வெளியானது. அட்டகாசமான மகான் படத்தின் டீசர் இதோ…