இந்திய திரை உலகின் மூத்த பழம்பெரும் நடிகரான திலீப் குமார், 1944ஆம் ஆண்டு வெளிவந்த ஜ்வார் பட்டா திரைப்படத்தின் மூலம் கதாநாயகராக பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர். பாலிவுட் சினிமாவின் புகழ்பெற்ற திரைப்படங்களான தேவதாஸ், குங்கா ஜும்னா,பாபுல்,லீடர் என 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் நடிகராகத் திகழ்ந்த திலீப் குமார் கடைசியாக 1998 இல் வெளிவந்த கில்லா  திரைப்படத்தில் நடித்தார். இந்தியா முழுக்க தனக்கான கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட மாபெரும் நடிகராக வலம் வந்தார்.ஹிந்தி திரையுலகில் மாபெரும் நடிகரான திலீப்குமார்  இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் பழம்பெரும் நடிகர் திலீப் குமார் இன்று காலை கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 98 வயதான திலீப்குமார்  மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார். 

மேலும் திலீப் குமாரின் ரசிகர்கள் அனைவரும் திலிப்குமார் விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.சமீபத்தில் பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் சகோதரர்களான இஷான் கான் மற்றும் அஸ்ஸலாம் கான் இருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் திலீப் குமார் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது இந்திய திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.