கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரக்ஷித் ஷெட்டி நடித்து விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் “777 சார்லி”. பிரபல இயக்குனர் கிரண்ராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை  தயாரிப்பாளர் ஜிஎஸ்.குப்தா உடன் இணைந்து நடிகர் ரக்ஷித் ஷெட்டி தயாரித்துள்ளார்.777சார்லி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் நோபின் பால் இசையமைக்க அரவிந்த் கஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

777 சார்லி என்ற பெயரில் இருக்கும் ஒரு அழகிய நாய்க்குட்டியை  மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ள கதைக்களத்தில் உருவாக்கியுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தமிழ் நடிகர் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.தர்மா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி  நடிக்க, தர்மாவுக்கும் சார்லிக்கும் இடையிலான  அழகான உறவை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படமாக சார்லி அமைந்துள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. 

மலையாள சூப்பர் ஸ்டார் ஆன பிரித்திவிராஜ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இத்திரைப்படத்தை மலையாளத்தில் வெளியிட உள்ளார். முன்னதாக கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை மலையாளத்தில் பிரித்திவிராஜ் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழில் 777 சார்லி திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளியிடுகிறார்.அழகான இத்திரைப்படத்தின் டீசரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இன்று வெளியிட்டுள்ளார். 777 சார்லி திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை  என அதன் டீசரிலேயே தெரிகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.