விஜய் டிவியில் முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப் பிரபலம் அடைந்தார். இதனையடுத்து LIFT திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார் நடிகர் கவின்.Ekaa என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் ஹெப்ஸி தயாரிக்கும் லிப்ட் திரைப்படத்தை புதுமுக இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ளார்.

த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள லிப்ட் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியான "என்ன மயிலு" என்ற பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ட்ரெண்டானது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிகில் திரைப்படத்தில் தென்றலாக நடித்த நடிகை அமிர்தா ஐயர் LIFT திரைப்படத்தில் நடிகர் கவினுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் LIFT திரைப்படத்தை  பார்த்துள்ள பிரபல தயாரிப்பாளரான லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திர்  LIFT  திரைப்படத்தை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில்,  "LIFT திரைப்படத்தை பார்த்தது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் அளவுக்கு த்ரில்லரான திரைப்படம். கவின் ரசிகர்களுக்கு விருந்தாக LIFT அமையும். 200 % ஏமாற்றமளிக்காது. தியேட்டரில் ரசிக்க வேண்டிய அனுபவம் LIFT. இயக்குனர் வினித் சிறப்பாக பணியாற்றி உள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இத்திரைப்படத்தில் வெளியிடுவதற்காக காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள LIFT திரைப்படம் ஏற்கனவே ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தயாரிப்பாளர் ரவீந்திர் பகிர்ந்துள்ள இந்த பதிவு இன்னும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திர் LIFT திரைப்படத்தை வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.