தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அரண்மனை 3. இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாகவும் ஹாரர் காமெடி திரைப்படமாகவும் வெளிவந்த அரண்மனை 3 குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து அரிமா நம்பி & இருமுகன் படங்களின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான எனிமி வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து இன்று தனது அடுத்த திரைப்படத்தை தொடங்கினார் ஆர்யா.

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ,இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். முன்னதாக சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த டெடி படத்தில் நடித்த ஆர்யா மீண்டும் அவருடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, நடிகை சிம்ரன் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.  எஸ்.யுவா ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு, டி.இமான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.