கைதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரபலமடைந்தார் நடிகர் அர்ஜுன் தாஸ். தனது தனித்துவமான குரலாலும் மிடுக்கான உடல் மொழியாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இருக்கிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய ஆல்பம் பாடலின் வீடியோ இன்று வெளியானது. போட்டும் போகட்டுமே என்ற அந்த ஆல்பம் பாடலில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து லாவண்யா திருப்பதி நடித்துள்ளார். 2050ஆம் ஆண்டில் இருக்கும் ஒரு வைரஸ் தொற்றின் காரணமாக உலகமே ஊரடங்கு இருப்பது போன்ற  ஃபேண்டசியான காட்சிகளோடு துவங்கும் இந்தப் பாடலில் அர்ஜுன் தாஸ் ஒரு ராணுவ மருத்துவராக நடித்துள்ளார். 

நீண்ட நாட்களாக பிரிந்த தன் காதலியை பற்றி வேதனையில் இருக்கிறார். காதலியான லாவண்யா திருப்பதி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அஹிம்ஸா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒன்றரை வருடகாலமாக எந்த தகவலும் இன்றி இருக்கிறார். இருவருக்கிடையிலான சந்திப்பிலிருந்து பாடல் ஆரம்பிக்கிறது. காதல் FANTASY அதிரடி ஆக்ஷன் என அனைத்தும் கலந்து கட்டிய ஒரு பாடலாக இந்த பாடல் வெளியாகியுள்ளது. 

அர்ஜுன் தாஸ் லாவண்யா திருப்பதி நடித்துள்ள இந்தப் பாடலை லோகின் மெட்ராஸ் விக்னேஷ் இயக்கியுள்ளார் சத்யஜித் ரவி மற்றும் ஜென் மார்டின் இணைந்து இசையமைத்துள்ள இந்தப் பாடலின் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.ஆரம்ப காட்சியில் அர்ஜுன் தாஸ் தனக்கே உரித்தான குரலில் பேசக்கூடிய வசனங்களைத் தொடர்ந்து பாடல் ஆரம்பிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.