கை வலியால் பரீட்சை எழுத முடியாமல் போய் விடுமோ என்ற மன உளைச்சலிலும் அச்சத்திலும் இருந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொருக்குப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜான்சிராணி.   ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார்.  ஐந்து வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் காலமாகி விட்ட நிலையில் தனது மகளை ஜான்சிராணி வளர்த்து படிக்க வைத்து இருந்திருக்கிறார். 

இந்நிலையில் தற்போது 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு கையில் அடிபட்டு இருக்கிறது. அந்த கையில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்திருக்கிறது.  நேற்றைய தினம் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் அடிபட்ட அந்த இடத்தில் வலி அதிகமாக இருந்திருக்கிறது.  இதனால் நேற்று மாலையில் தனது அம்மாவிற்கு செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை.  கை அதிகமாக வலிக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து ஜான்சிராணி,  நைட் டிபன் வாங்கி வருகிறேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு என்று சொல்லி இருக்கிறார்.  இதன் பின்னர் வேலை முடிந்ததும் இரவு டிபன் வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார் ஜான்சிராணி.    போகும்போது மகளுக்குத் செல்போனில் தொடர்பு கொண்டு இருக்கிறார்.  ஆனால் செல்போன் எடுக்கவில்லை.  இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்களுக்கு ஜான்சிராணி தகவல் சொல்லியிருக்கிறார். 

மேலும் இதையடுத்து உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது வீட்டின் உட்புற கதவு பூட்டப்பட்டு இருந்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மாணவி தூக்கில் தொங்கியது தெரிய வந்திருக்கிறது.  சம்பவம் குறித்து அறிந்த ஆர்கே நகர் போலீசார் மாணவி உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில்  ஆர்கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  அடிபட்ட கையில் வலி அதிகமாக இருந்ததால் எங்கே தேர்வு எழுத முடியாமல் போய் விடுமோ என்ற அச்சத்திலும் மன உளைச்சலிலும் இருந்ததால்தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.