தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்திய திரை உலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஆவார். தமிழில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார்.

தற்போது தென்னிந்திய திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழும் இசையமைப்பாளர் அனிருத்தை 3 திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்த வை ராஜா வை படத்தை இயக்கினார். கடைசியாக சினிமா வீரன் எனும் டாக்குமென்டரி திரைப்படத்தையும் இயக்கினார்.

முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியினர் தங்களது விவாகரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து தற்போது மீண்டும் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ள இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கியுள்ளார்.

பே ஃபிலிம்ஸ் LLP தயாரித்துள்ள முசாஃபிர் மியூசிக் வீடியோவில் சிவின் நரங் நடித்துள்ளார். அங்கித் திவாரி இசையமைத்துள்ள இந்தப் பாடல் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் பாடலை தமிழில் இசையமைப்பாளர் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் மற்றும் தெலுங்கில் சாகர் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்நிலையில் முசாஃபிர் பாடலின் ப்ரோமோ வீடியோ காதலர் தினமான இன்று (பிப்ரவரி 14-ஆம் தேதி) வெளியானது. விரைவில் ரிலீசாக உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-அனிருத்தின் முசாஃபிர் பாடலின் அசத்தலான ப்ரோமோ இதோ…