செம்பருத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர், உழைப்பாளி, அதிரடி படை, சூரியன், வீரா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா பின்னர் ஆந்திர மாநில அரசியலில் ஆர்வம் காட்டினார். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டார்.

தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்த இவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பை குறைத்து, அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கினார். தற்போது ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் ரோஜா.

ரோஜா துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கடந்த ஆண்டு பேசப்பட்டது. நடிகை என்பதால் மக்களிடம் உடனடி கவனம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் ரோஜா மக்களுடன் இரண்டறக் கலந்து பழகக்கூடியவர்.

அந்த வகையில் நகரி தொகுதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரோஜா, அங்குள்ள இளைஞர்களுடன் கபடி போட்டியில் பங்குபெற்றார். எதிர் அணியில் வீரர்கள் அணி வகுத்து நின்ற நிலையில் ரெய்டு போய் தெறிக்க விட்டார். இந்த எல்லைக்கும் அந்த எல்லைக்கும் வேகமாக ஓடி வீரர்களை தொட முயற்சித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத அப்பகுதி மக்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.