சூரரைப்போற்று படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சூர்யா 39 எனும் இத்திரைப்படத்தில் கர்ணன் பட நாயகி ராஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகும் சூர்யா 40 படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார் நடிகர் சூர்யா . இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிக்கிறார். விரைவில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் 36 வயதினிலே, பசங்க 2, 24, மகளிர் மட்டும்,கடைக்குட்டி சிங்கம், ஜாக்பாட், உரியடி2, சூரரைப்போற்று உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்துள்ளார். அடுத்ததாக நடிகைகள் வாணி போஜன் மற்றும் ரம்யா பாண்டியன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்குகிறார்.

இந்நிலையில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் பாதுகாப்பிற்காக வருகிற ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இவர்களுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தவுள்ளார். தன் படக்குழுவினருக்காகவும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இலவச தடுப்பூசி முகாம் நடத்தும் நடிகர் சூர்யாவின் இந்த செயலை திரையுலகைச் சேர்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர்.