கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை மொத்த உலகத்தையும் உலுக்கியுள்ளது. தொடர்ந்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் தமிழகத்திலும் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை நாம் பார்க்கிறோம். 

நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளுக்கு பலரும்  நிவாரண மற்றும் நிதி உதவிகளை அளித்து  வருகிறார்கள். தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண கல்விக்கு நிதி உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் பலரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும்  கொரோனா நிவாரண பணிகளுக்காக நிதி உதவி அளித்து வந்தனர். 

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சூரி தற்போது நிதியுதவி அளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான திரு.உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நடிகர் சூரி வழங்கியுள்ளார். மேலும் தன்னுடைய  மகள் வெண்ணிலா மற்றும் மகன் சர்வான் சார்பில் 25,000 ரூபாய் ரொக்கமாக வழங்கியுள்ளார். நடிகர் சூரி-யின் இந்த நிதி உதவியை  பலரும் பாராட்டி வருகின்றனர் . 

ஆரம்பத்தில் சிறிய நகைச்சுவை வேடங்களில் தோன்றிய நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திற்கு பிறகு படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். மேலும் தற்போது  தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து விடுதலை திரைப்படத்தில்  கதாநாயகனாக நடித்து வருகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.