வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “யாஸ் புயலாக” வலுப்பெற்று உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும் என்று, ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

“யாஸ்” என்று, பெயரிடப்பட உள்ள இந்த புயலானது, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என்று, தற்போது கணிக்கப்பட்டு உள்ளது. 

இந்த புயல் கரையைக் கடக்கும் போது, மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 

இதனால், “அடுத்து வரும் 4 நாட்களுக்கு மீனவர்கள் வங்கக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம்” என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த புயல், அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக, கடற்கரையோர பகுதிகளில் இன்று முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலில் 20 அடி உயரம் வரை அலைகள் எழக்கூடும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

புதிதாக உருவான “யாஸ்” புயல் காரணமாக, தமிழகத்தில் சென்னை, நாகை, கடலூர் துறை முகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
 
இப்படியான சூழ்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி, நேற்று ஆலோசனை மேற்கொண்டார். 
காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

அப்போது, புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது, மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பது, போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்“ என்றும், பிரதமர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், “புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில், கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்குத் தடையின்றி சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதே நேரத்தில், “வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், இன்றைய தினம் இடி உடன் கூடிய கனமழை பொழி பெய்யும்” என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதே போல், “மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. 

மேலும், “சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்” என்றும், 

குறிப்பாக, “தமிழக கடலோர மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால், அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம்” என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதனிடையே, யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்னை, உதகை மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.