இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையடுத்து இ பதிவு இல்லாமல் வெளியில் வரும் வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றர்.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்து இருக்கிறது.

இப்படி, தமிழகத்தில் அதிகரித்துக் காணப்படும் கொரோனா பாதிப்பை குறைக்கும் நடவடிக்கையாக, கடந்த 10 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பொது மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால், கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகளும் சற்றும் குறையவில்லை. இதன் காரணமாக, இது வரை வழங்கப்பட்டு வந்த தளர்வுகள் அனைத்தும் அதிரடியாக நீக்கப்பட்டு, இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி, இன்று அதிகாலை முதல் ஒரு வார காலத்துக்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால், பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை அமலுக்கு வந்துள்ளன. 

அதன்படி, 

காய்கறி, மளிகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் ஒருவார காலத்துக்குத் திறக்கப்படவில்லை. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், பார்சல் உணவு சேவை தவிர்த்த எந்த சேவையும் செயல்படுத்தப்படவில்லை.

அத்துடன், இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், நேற்று அனைத்து கடைகளும் திறந்திருந்தது. இதனால், தமிழகம் முழுவதுமே நேற்று ஒறே நாளில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதிக் காணப்பட்டது.

முந்தைய ஊரடங்கில் காய்கறி, பழக்கடைகள் தொடக்கத்தில் மதியம் 12 மணி வரை செயல்பட்டன. அதன் பிறகு, அதாவது 15 ஆம் தேதியில் இருந்து காலை 6 மணி முதல் 10 மணி வரையில் மட்டுமே இவை இயங்க அனுமதிக்கப்பட்டன. ஆனால், இப்போது தளர்வுகள் இல்லாத ஊரடங்கில் காய்கறி, பழக்கடைகளும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், பொது மக்களின் நலனைப்பேணுகிற வகையில் காய்கறி, பழ வகைகளை வீடு தேடிச்சென்று வாகனங்களில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. 

அதன் படி, தமிழகம் முழுவதும் இன்று முதல் 4,380 வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வீதி வீதியாக விற்பனை செய்யப்பட உள்ளன.

உள்ளாட்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

இப்படியாக, தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பொது மக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என்றும், தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. திறந்திருக்கும் சில சாலைகளில் கூட ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றன.

அத்துடன், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இவற்றுடன், சாலையில் உள்ள சிக்னல்கள் இயங்காது என்றும், ஏற்கனவே கூறப்பட்டு உள்ளது. 

மேலும், சென்னையில் மட்டும் சுமார் 153 இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றுடன், டிரோன் கேமரா மூலமாகவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது, கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும், அப்படி வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

இதனிடையே, முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதையடுத்து, போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.