டாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச முட்டைகள் வழங்கவும், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மையங்கள் மூலமாக மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுதா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணை நடைபெற்ற போது,  பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரே மாதிரியான மாத்திரைகளை அனைவருக்கும் வழங்க முடியாது என்றும், அதில் பிரச்சனை உள்ளதாகவும் தெரிவித்தார். மாணவ-மாணவிகளுக்கு முட்டை வழங்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு சானிடரி நாப்கின் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூக இடைவெளி பிரச்சனை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு முறையாவது அல்லது இரு முறையாவது எப்படியாவது முட்டை வழங்க வேண்டும் என்றும், எப்படி வழங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும்? எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
மதுக்கடையில் சமூக இடைவெளி முறையாக பின்பற்றபடுகிறதா என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  மேலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காததால் டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டியதுதானே? என கேள்வியை முன் வைத்தனர். இதனால் அரசு தரப்பில் ஒரு நாள் அவகாசம் வேண்டும் என கோரப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு முட்டை வழங்க என்ன திட்டம் உள்ளது என்பதை தமிழக அரசு நாளை தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.