திருவள்ளூர் மாவட்டத்தில் “மகள் மனைவி முன் போலீஸ் என்னைத் தாக்கி மிரட்டியதால், நான் தீ குளித்தேன்” என்று, சாகும் முன் ஒருவர் மரண வாக்குமூலம் அளித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் தந்தை - மகன் லாக்கப் டெத் விவகாரம், தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதன் வடு மறைவதற்குள், அடுத்த சில நாட்களிலேயே தென்காசியில் போலீசார் தாக்கி தன் கணவர் உயிரிழந்துள்ளதாக, பாதிக்கப்பட்டவரின் மனைவி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த இரு வழக்குகளும் நடைபெற்று வரும் நிலையில், இந்த இரு சம்பவங்களிலும், போலீசார் மீது இருந்த நன்மதிப்பு முற்றிலும் சிதைந்து, எதிர்மறையான கருத்துக்கள் எழுந்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், அதே போன்ற ஒரு சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் மீண்டும் நடந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், தனக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில், பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்யும் சீனிவாசன், தன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இன்றி தவித்து அன்றாட சாப்பாட்டிற்கு கடும் சிரமப்பட்ட வந்த சீனிவாசன், கடந்த 3 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. 

இதன் காரணமாக, அந்த வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன், வாடகை தரும்படி சீனிவாசனை கடுமையாக டார்ச்சர் செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், ராஜேந்திரன் - சீனிவாசன் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதனையடுத்து, “வாடகை தரவில்லை என்றால், வீட்டை காலி செய்யும்படி வீட்டு உரிமையாளர் கடுமையாகத் திட்டி நிர்ப்பந்தித்து” வந்துள்ளார். ஆனாலும், “வேலைக்குச் சென்றதும் பணத்தைத் திருப்பி தருவதாக” சீனிவாசன் கெஞ்சி உள்ளார். 

சாப்பாட்டிற்கு வழியின்றி தவித்த சீனாவாசன், வாடகை பணமும் தராமல், வீட்டையும் காலி செய்ய இருந்து வந்தாக தெரிகிறது. இதனால், கோபமடைந்த வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன், சீனிவாசன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் குறித்து, புழல் காவல் ஆய்வாளர் பென் சாம், சீனிவாசனை காவல் நிலையத்திற்கு வரவைத்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. 

விசாரணையின் போது காவல் ஆய்வாளர் பென் சாம், சீனிவாசனை அவரது மனைவி மற்றும் மகள் முன்பு, தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், போலீசார் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால், மனைவி மற்றும் மகள் முன்னால் சீனிவாசன் அவமானம் அடைந்து நின்றார்.

இதனால், கடும் மனம் உளைச்சலுக்கு ஆளான சீனிவாசன், அவரது வீட்டில் மண்ணெண்ணெயை ஊற்றி தன் உடலில் தீ வைத்துக் கொண்டார். இதில், தீ பற்றி எரிந்த நிலையில், கடும் சத்தம் போட்டு, அலறி துடித்துள்ளார். சீனிவாசனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சீனிவாசனை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மருத்துவமனையில் 85 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன், தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்குப் போராடி வந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சீனிவாசனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. 

அப்போது, “மகள் மனைவி முன் காவல் ஆய்வாளர் பென் சாம், என்னைத் தாக்கி மிரட்டியதால், நான் தீ குளித்தேன்” என்று, சாகும் முன் சீனிவாசன் மரண வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து, சீனிவாசன் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்குப் போராடி வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, உயிரிழந்த சீனிவாசன் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், “புழல் காவல் நிலைய ஆய்வாளர் பென் சாம் பணியிடை நீக்கம் செய்து, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடியாக உத்தரவிட்டார். அத்துடன், இது தொடர்பாக மேல்கட்ட விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார். அதன்படி, துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.