பலத்த எதிர்ப்புக்கிடையே நாடாளுமன்றத்தில் 3 புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது மத்திய அரசு. அதை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, உ.பி. உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் திரண்டு கடுங்குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 13-வது நாளாக இன்றும் தொடரும் போராட்டத்தில் , மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் , பாரத் பந்த் என்ற முழு அடைப்பு போராட்டத்தை விவசாயிகள் அறிவித்தனர்.

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. 


தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் விவசாயிகள் போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. போராட்டம் தீவிரமடையும் என்பதால் தமிழக அரசு  பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

முழு அடைப்பு போராட்டத்தால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அனைத்து அரசு பேருந்துகளும் , ஆட்டோகள் இயக்கப்படுகிறது.  ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு பிறகு எல்லா பகுதிகளுக்கும் ஆம்னி பஸ் சேவை இருக்கும்.


விடுப்பில் இருக்கும் அனைத்து போக்குவரத்து கழகத்தில் இருந்தும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் , தொழிலாளர்களையும் பணிக்கு உடனே திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பந்துக்கு ஆதரவாக மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கும்பகோணம், சீர்காழி, திருவாரூர், மதுரை, கோபிச்செட்டிபாளையம், மரக்காணம் , திருவள்ளூர், விழுப்புரம், நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பூர், மன்னார்குடி,தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பந்துக்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.


கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, டெல்டா மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் திரண்டு   சாலை மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.