மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஒரே நேரத்தில் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்ததால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான 80 வயதான மதுசூதனன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 

இதனையடுத்து, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல் நலம் தேறி வீடு திரும்பினார். அதன் பிறகு, அவருக்கு தற்போது 80 வயது ஆவதால், இந்த வயது முதிர்வு காரணமாக அவர் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அதே நேரத்தில், சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அவர் ஓய்வில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், மதுசூதனன் உடல் நிலை திடீரென மோசம் அடைந்த நிலையில், அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அத்துடன், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அவருக்கு தற்போது வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், 24 மணி நேரமும் அவர் மருத்துவர்களின் தொடர் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார்.

மதுசூதனன் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவர் உடல் நலம் விசாரித்தார்.

இதனையடுத்து, மதுசூதனன் உடல் நலம் குறித்து விசாரிக்க எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வரப்போவதாகத் தகவல் வெளியானது. அதே நேரத்தில் சசிகலாவும் வரப்போவதாகத் தகவல் வெளியானது. இதனால் அப்போலோ மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் வந்த எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அதே நேரத்தில், அதிமுக கொடியுடன் கூடிய காரில் சசிகலாவும், அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். 

அப்போது, சசிகலாவும் - எடப்பாடி பழனிசாமியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் என்ன ஆகும்? என்கிற எதிர்பார்ப்பு, அனைவரின் மனதிலும் தொற்றிக் கொண்டது.

“எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையின் உள்ளே நலம் விசாரித்துக்கொண்டு இருப்பதாக” சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்டுக்கொண்ட சசிகலா, எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லும் வரை, தன்னுடைய காரிலேயே சசிகலா காத்திருந்தார். 

அதே நேரத்தில், “சசிகலா, தன்னுடைய காரிலேயே மருத்துவமனையின் வெளியே காத்திருப்பதாக” எடப்பாடி பழனிசாமியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பதறிய எடப்பாடி பழனிசாமி, அவசர அவசரமாக அப்போலோ மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். இதனால், எடப்பாடி பழனிசாமியின் கார், வெளியே வருவதும், அதே நேரத்தில் சசிகலாவின் கார் உள்ளே செல்வதுமான காட்சிகள் அப்போலோ மருத்துவமனையில் அரங்கேறியதால், அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துடன், அப்போலோ மருத்துவமனையில் நுழைவு வாயிலும், வெளியேறும் வாயிலும் வெவ்வேறு திசையில் உள்ளதால், இருவரும் கடைசி வரை சந்திக்க முடியவில்லை.

பின்னர், உள்ளே வந்த சசிகலா, மதுசூதனனின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். இந்த சந்திப்பு, 5 நிமிடங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.