சாத்தான் குளம் லாக்கப் டெத் சம்பவம் தொடர்பாக தைரியமாக வாக்குமூலம் அளித்த பெண் காவலர் ரேவதியை பாராட்டி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், தந்தை - மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களைக் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். 

இதனையடுத்து, அன்று இரவே பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மறுநாள் காலை தந்தை ஜெயராஜூம் உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்பட்டது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் அடுத்தடுத்து சிறையிலேயே உயிரிழந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால், கடும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகள்,  ஊர் மக்கள் அனைவரும், சாத்தான் குளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனிடையே, தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸின் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இந்த செய்தி, காட்டுத் தீ போல் உலகம் முழுவதும் பரவிய நிலையில், மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு விசாரணை செய்தது. இதனையடுத்து, இந்த வழக்கில், சாத்தான் குளம் காவல் நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் கடந்த 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் போது, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களைத் தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இமெயில் மூலம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், “ஜெயராஜ் - பென்னிக்சை போலீசார் விடிய, விடிய அடித்தனர்” என்று மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனை நேரில் பார்த்தவர்கள் தன்னிடம் சாட்சி சொன்னதாகவும், அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டு இருந்தார். 

குறிப்பாக, “சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, “சாத்தான் குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், ஜெயராஜ் - பென்னிக்ஸை, போலீசார் விடிய விடிய கடுமையாக தாக்கியதையும், இதனால் காவல் நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக் கறை பதிந்ததாகவும் தெரிவித்ததை” சுட்டிக்காட்டி இருந்தார்.

முக்கியமாக, “தலைமைக் காவலர் ரேவதி சாட்சியம் அளிக்கும் போது, அவர் மிகுந்த அச்சத்துடன் இருந்தார் என்றும், அவர் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கொடுக்கப்பட்டது என்றும், காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் விசாரணையை வீடியோ எடுத்தும் வாக்குமூலம் கொடுத்த ரேவதியை மிரட்டும் தொனியிலும் ஈடுபட்டனர்” என்றும், நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தெரிவித்தார்.கடைசியில் வாக்குமூலம் அளித்த ரேவதி, பயத்தின் காரணமாக வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார் என்றும். மிகவும் சிரமப்பட்டே கையெழுத்தை பெற முடிந்தது” என்றும், நீதித்துறை நடுவர் தனது அறிக்கையில் கூறியிருந்தார். 

மேலும், “எனக்கு மிரட்டல் வரும்” என்று காவலர் ரேவதி தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, ஜெயராஜ் - பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது என்றும், இதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடரலாம் என்றும் தெரிவித்த நீதிமன்றம், டி.ஜி.பி.யின் உத்தரவிற்காக காத்திருக்காமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக விசாரணையை கையிலெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் தைரியமாக வாக்குமூலம் அளித்த காவலர் ரேவதிக்கு, திரையுலக பிரபலங்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதன்படி, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், “ சாத்தான் குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோ, சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்தில், “நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலை வணங்குகிறேன். உங்களோடு தேசம் துணை நிற்கிறது” என்று கூறியுள்ளார்.  

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பக்கத்தில், “ 'ஜெயராஜ் - பென்னிக்ஸ் உடல் நலக்குறைவால் இறந்தனர்' ” என்று முதல்வர் கூறியதை சுட்டிக்காட்டி, “இவ்வழக்கின் சாட்சியான பெண் காவலருக்கு பாதுகாப்பளிக்க வேண்டும்” என்பதை நீதிமன்றம் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதனால், “இப்படியாக அரசிடமிருந்து மக்களை, போலீஸிடமிருந்து போலீசை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தமிழகத்தை தள்ளி வந்திருப்பதே தமிழக முதலமைச்சர் அவர்களின் சாதனை” என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதனிடையே, தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை - மகன் மரண விவகாரத்தில் சிபிசிஐடி வழக்கு பதிந்தது விசாரணையை தொடங்கி உள்ளது. வழக்கின் ஆவணங்களை பெற்ற டிஎஸ்பி அனில்குமார் சிபிசிஐடி வழக்கு 1, 2 என பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.