“தமிழ்நாட்டில் தற்போது உள்ள நிதி நிலையை சீரமைத்த பிறகு நிச்சயம் பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படும்” என்று, நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டசபையின் 3 வது நாள் கூட்டம் சற்று முன்பாக தொடங்கியது. தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் கடனில் இருப்பதென்றால், அதனைப் போக்க செயல் திட்டம் வகுக்கலாம்“ என்று கெட்டுக்கொண்டார். 

அத்துடன், “பெட்ரோல் - டீசல் வரி முன்பில்லாத அளவுக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது” என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், “திமுக தேர்தல் வாக்குறுதியில்  பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படும் என கூறப்பட்டது என்றும், ஆனால் ஆளுநர் உரையில் இது இடம் பெறவில்லை” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

இந்த கேள்விக்கு அதில் அளித்துப் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்த போதும், தமிழகத்தில் 3 முறை பெட்ரோல் - டீசல் மீதான வரியை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறைத்தார்” என்று, குறிப்பிட்டு பேசினார்.

அதே போல், “கடந்த 2014 ஆம் ஆண்டில் பெட்ரோல் மீதான செஸ் வரி 9 ரூபாயாக இருந்தது என்றும், அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக பெட்ரோல் மீதான வரியை 28 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தினார்கள்” என்றும், சுட்டிக்காட்டினார்.

“கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக பொறுப்பேற்ற பிறகு 9 ரூபாய் 48 பைசாவாக இருந்த பெட்ரோல் வரியை 21 ரூபாய் 48 பைசாவாக செஸ் வரியை உயர்த்தியது” என்றும், குறிப்பிட்டுப் பேசினார். 

“இன்றைய நிலையில் 4 சதவீதம் தான் 31 மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கக் கூடிய வரியாக உள்ளது என்றும், 96 சதவீதம் ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது” என்றும், அவர் தெரிவித்தார். 

முக்கியமாக, “செஸ் வரி கூறப்பட்ட காரணத்திற்காகப் பயன்படுத்தாமல், மறைமுகமாக ஒன்றிய அரசே எடுத்துக்கொண்டுள்ளது என்றும், ஜிஎஸ்டி வரியில் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணத்தையும், மத்திய அரசு அப்படியே எடுத்துக்கொண்டு  உள்ளது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

குறிப்பாக, “மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டிய 50 ஆயிரம் கோடி வரியை ஒன்றிய அரசு, இது வரை கொடுக்கவில்லை என்றும், இதனால் மாநிலங்களுக்கு வட்டி சுமை கூடுதலாக அமைகிறது” என்றும், விளக்கமாகவே எடுத்துரைத்தார்.

“தமிழகத்தின் நிதி நிலைமை உள்ள சூழலில் தற்போதைக்கு பெட்ரோல் - டீசல் மீதான வாட் வரியை குறைக்க முடியாது என்றும், அதே நேரத்தில், தமிழகத்தில் நிதி நிலை சீராகும் போது, பெட்ரோல் - டீசல் மீதான வரி குறைக்கப்படும்” என்றும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதிப்படத் தெரிவித்தார்.