எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று காலை  அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதாவது, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்குப் பிறகு திடீரென்று கடந்த ஏப்ரல் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து பிறகு, எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அன்று, அவர் உடல் நலம் தேறி வீடு திரும்பினார். 

பின்னர், அவர் சில நாட்கள் தனது வீட்டில் இருந்தபடியே ஓய்வு எடுத்த பிறகு, மீண்டும் அவர் தனது வழக்கமான அரசியல் பணிகள் மற்றும் கட்சி பணிகளை தொடங்கினார்.

அத்துடன், எடப்பாடி பழனிசாமிக்கு குடலிறக்கம் நோயான ஹெர்னியா இருப்பது கண்டறியப்பட்டதால், அவருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான், கடந்த ஏப்ரல் மாதம் அவர் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதால், அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார் என்றும், தகவல்கள் கூறுகின்றன. 

இந்த நிலையில் தான், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் இன்று மீண்டும் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு, ஏற்கனவே குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்துள்ளதால், எண்டோஸ்கோபி செய்துக் கொள்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு இன்று மதியமே அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.