கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்த காதலர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரளா மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் உள்ள இளமனூர் பகுதியில் வசித்து வரும் வர்கீஸ் என்பவரின் மகன் 22 வயதான ஜெபின் ஜோன், அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். 

அதே போல், அங்குள்ள முதுவெல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோன் மாத்யூ என்பவரது மகள் 22 வயதான சோனா ஷெரீன் என்பவரும், அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். 

இவர்கள் 2 பேரும் கொல்லம் மாவட்டத்தில் பத்மநாபபுரம் என்ற இடத்தில் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், கடந்த 2 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். காதலர்களாக இருவரும், அந்த பகுதியின் பல்வேறு இடங்களுக்குச் சென்று, தங்களது காதலை வளர்த்து வந்தனர். 

இந்த சூழலில் தான், இவர்கள் காதல் விசயம் இருவரின் வீட்டிற்கும் தெரிய வந்த நிலையில், இருவர் வீட்டிலும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், நேற்று காலையில் 22 வயதான காதலன் ஜெபின் ஜோன், தனது வீட்டின் படுக்கை அறையில் இருக்கும் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுது, போலீசாருக்கு தெரியப்படுத்தினர். 

ஆனால், ஜெபின் ஜோன் தற்கொலை செய்துகொண்ட அடுத்த சில நிமிடத்தில் அவரது காதலியான சோனா மெரீன் தனது வீட்டில் படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத்  தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் குறிப்பிட்ட இருவர் உடலையும் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், “இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம்?” என்று, அரூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். 

இந்த விசாரணையில், “காதலன் ஜெபின் ஜோன் தற்கொலை செய்ததை அறிந்த பிறகு, காதலியான சோனா மெரீனும் அதே போல் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்” என்றும், போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

குறிப்பாக, காதலர்கள் இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.