சிறுமி மீதான ஒருதலை காதலால், சிறுமியின் பெற்றோர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி மீது, ஜன்னல் வழியாகக் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விரும்பி செய்வதே காதல். அந்த காதல் கிடைக்காவிட்டாலும், காதலித்த பெண் கிடைக்காவிட்டாலும், அவளை வாழ்த்தி ஒதுங்கி நிற்பதே காதலின் மேன்மை பொருந்திய பண்புகள். மாறாக, அந்த பெண்ணை பயமுறுத்துவதும், ஆசிட் அடிப்பதும், கொலை செய்வதும் சிறுமையிலும் தாழ்மை. இப்படியான சிறுமையான நிகழ்வுகள் தான் நம் அன்றாட சமூகத்தில் அதிகம் நடக்கத் தொடங்கி இருக்கிறது.

புதுச்சேரி பாகூர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான மாதேஷ், அதே பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக, சிறுமி வரும் போதும், போகும் போதும் அவரை பின் தொடர்ந்து சென்று மாதேஷ் நிறையத் தொல்லைகள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பயந்து போன சிறுமி, தனது பெற்றோரிடம் இது பற்றி கூறியுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் மாதேசை அழைத்துக் கண்டித்தனர். இதனால், ஆத்திரமடைந்த மாதேஷ், இன்று இரவு நேரத்தில் அந்த சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்குச் சிறுமி நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், ஜன்னல் வழியாகச் சிறுமி மீது, கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிவிட்டு, அங்கிருந்த தப்பிச் சென்றார்.

கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றப்பட்டதில் சிறுமியின் கை, கழுத்து, முகம், என பல பகுதிகளில் முழுவதுமாக வெந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதில், வலியால் அலறித்துடித்த வலியில் துடித்த சிறுமியை, ஓடிவந்த பார்த்த அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், இது குறித்து சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வழக்குப் பதிவு செய்த கிருமாம்பாக்கம் போலீசார், மாதேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஒருதலை காதல் காரணமாக, சிறுமி மீது இளைஞர் ஒருவர் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல், கோவையில் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியும், ஆசை வார்த்தைகள் கூறியும் அழைத்துச் சென்ற இளைஞர், போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், அந்த பகுதியில் உள்ள இடையர்ப் பாளையத்தைச் சேர்ந்த 20 வயதான ஹர்ஷாத் என்ற இளைஞரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

இதனிடையே, அந்த இளைஞர் அந்த 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அழைத்துச் சென்று உள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியை அந்த பகுதியில் உள்ள தனது நண்பனின் வீட்டில், அவர் தங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில், தங்களது 16 வயது சிறுமியைக் காணவில்லை என்று ஜூன் 28 ஆம் தேதி குனியமுத்தூர் காவல் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்கப் பதிவு செய்த போலீசார், சிறுமியின் தோழிகளிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில், அந்த சிறுமி 20 வயதான ஹர்ஷாத் என்ற இளைஞரைக் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ஹர்ஷாத் தங்கி இருக்கும் வீட்டை நோட்ட மிட்ட போலீசார், அவரின் நண்பன் வீட்டிற்குச் சென்று சிறுமியை மீட்டனர். இதனையடுத்து, அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமணம் செய்து கொள்ளவே, சிறுமியை அழைத்துச் சென்றதாக அந்த இளைஞன் கூறி உள்ளான். 

ஆனாலும், பெண்ணிற்கு இன்னும் 18 வயது கூட பூர்த்தி ஆகாத நிலையில், சிறுமி எந்த காரணம் சொல்லி அழைத்துச் சென்றாலும், அது சட்டப் படி தவறு என்று போலீசார் சுட்டிக் காட்டினர். இதனைத் தொடர்ந்து, ஹர்ஷாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.