“ஆதரவாளர்கள் விரும்பினால் நிச்சயம் தனிக்கட்சி தொடங்குவேன்” என்று, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசியல் களம் தற்போது தான் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது என்றே சொல்லலாம்.

வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, அண்மைக் காலமாக புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், வரும் தேர்தலில் தனது பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என்றும் பரபரப்பான கருத்துகளைத் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது தாயார் தயாளு அம்மாளை இன்று காலை மு.க.அழகிரி, சந்தித்து நலம் விசாரித்தார். 

அப்போது, தயார் தயாளு அம்மாளின் உடல் நலத்தை கேட்டறிந்த மு.க.அழகிரி, அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது, அவரை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, “சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, திமுகவில் இருந்து எந்த அழைப்பும் எனக்கு அதுவரை வரவில்லை” என்று, தெரிவித்தார்.

குறிப்பாக, “அழைப்பு வராத காரணத்தால், திமுகவுடன் இணைந்து தேர்தல் பணி செய்ய வாய்ப்பில்லை” எனவும், அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

“வரும் தேர்தலில் எனது பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், வாக்களிப்பதும் ஒருவகையான பங்களிப்பு தான்” என்றும், நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

மேலும், “எனது ஆதரவாளர்கள் விரும்பினால், தனிக்கட்சி தொடங்குவேன்” என்றும், மு.க. அழகிரி அதிரடியாக அறிவித்தார்.

அத்துடன், “வரும் 3 ஆம் தேதி மதுரையில் எனது ஆதரவாளர்களுடன் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன் என்றும், அப்போது  எனது தொண்டர்கள் விரும்பினால் நிச்சயம் கட்சித் தொடங்குவேன்” என்றும், மீண்டும் குறிப்பிட்டார்.

அப்போது, நடிகர் ரஜினி உடனான சந்திப்பு பற்றிய செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாகப் பதில் அளித்துப் பேசிய மு.க.அழகிரி, “ரஜினிகாந்த் சென்னைக்கு வந்தால் அவரை நிச்சயம் சந்திப்பேன்” என்று, கூறினார்.

“ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால், பிறந்த நாளன்று அவரைச் சந்திக்க முடியவில்லை என்றும். ரஜினியை விரைவில் நேரில் சந்திப்பேன்” என்றும், மு.க.அழகிரி உறுதிப்படத் தெரிவித்தார்.

மு.க.அழகிரியின் இந்த பேட்டி, திமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, எதிர் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என்று மு.க.அழகிரி, தொடர்ச்சியாகக் கூறி வருவதும், நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதும், அவரைப் பற்றியே தொடர்ந்து பேசி வருவதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.