தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் `அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்?' என்பது குறித்து முடிவு செய்ய அக்கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு அ.தி.மு.க.வில் நிலவும் உட்கட்சி பிரச்சினையை வெளி கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள், நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க கூடாது அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்தனர். சமீபத்தில் சென்னையில் நடந்த அரசு விழா அழைப்பிதழ் மற்றும் விளம்பரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதன்பின்னர் சில நாட்கள் முதல்வர் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று காந்தி பிறந்தநாள் நிகழ்வில் மட்டும் கலந்துகொண்டார். ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துப் பேசவில்லை.

இதனைத் தொடர்ந்து சொந்த ஊரான பெரியகுளத்துக்குப் புறப்பட்டுச் சென்றார் பன்னீர்செல்வம். இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 ஆம் தேதி மாலை சென்னை வர உத்தரவு என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு முந்தைய நாள் எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் கட்சி தலைமை வெளியிடவில்லை.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, ``கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அதிமுகவின் செயற்குழுவில் அரசு கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றிதான் கூட்டத்தை நடத்தினோம். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் அதை காரணம் காட்டி கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தற்போதுள்ள அபாய கட்டத்தில் கூட்டத்தை தவிர்ப்பதன் மூலம் நோய்த் தொற்றைத் தடுக்க முடியும் என்பதற்காகவே அரசு கிராம சபை கூட்டத்தை ரத்து என்ற முடிவை எடுத்தது. ஆனால், எனக்கு சட்டம் கிடையாது என ஸ்டாலின் செயல்படுவது எப்படி ஜனநாயகத்தில் சரியாக இருக்கும்? ஸ்டாலின் தடையை மீறி செயல்பட்டது குற்றம் குற்றமே. 6-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்துக்கு வர வேண்டும் என்ற தகவல் தவறானது. அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துன் நோக்கில் திட்டமிட்டு இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்கள்.

வதந்திகளை பரப்பி குளிர்காய துரோகிகளும் எதிரிகளும் நினைக்கின்றனர். அது நிச்சயம் நடைபெறாது. உட்கட்சி விவகாரம் தொடர்ந்தால் அதிமுக ஆட்சிக்கு வருவதை மறந்துவிட வேண்டியதுதான் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்த கருத்தை நான் ஏற்க மாட்டேன். அதிமுகவில் நடப்பது நாளையே சரியாகிவிடும். அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். பூகம்பமே ஏற்பட்டாலும் அதிமுகவில் எந்தப் பிளவும் ஏற்படாது” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.