உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்தும், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மீதான அடக்குமுறையை கண்டித்தும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் உத்தரபிரதேச சம்பவத்துக்கு நீதி கேட்டு தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் கையில் ஒளியேந்தி மகளிர் அணி சார்பில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை நோக்கி நேற்று மாலை பேரணி நடைபெற்றது. அதற்காக சென்னை சின்னமலை, ராஜீவ்காந்தி சிலை அருகே தி.மு.க. மகளிர் அணியினர் திரண்டனர்.

‘நாம் ஏற்றும் ஒளி, தவறுகளை எரிக்கட்டும்’ என்ற முழக்கத்துடன் பேரணி தொடங்கியது. இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீபச்சுடர் ஏற்றி தொடங்கிவைத்தார். பேரணி, கனிமொழி எம்.பி. தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி சென்றது. பேரணி தொடக்க நிகழ்ச்சியில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, எ.வ.வேலு, மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, தி.மு.க. மகளிர் அணி அவைத்தலைவர் விஜயா தாயன்பன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, கீதா ஜீவன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் உள்பட மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.

பேரணி கவர்னர் மாளிகையை நோக்கி சிறிது தூரம் சென்றதும் போலீசார் இரும்பு தடுப்புகள் மூலம் தடுத்து நிறுத்தினார். இதனால் போலீசாருக்கும், பேரணியில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இரும்பு தடுப்பு வேலியை தாண்டி கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கவர்னர் மாளிகை நோக்கி புறப்பட்டனர். பேரணியில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

பேரணி தொடங்குவதற்கு முன் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

``உத்தரபிரதேசத்தில் பயங்கர மான பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. 19 வயது நிரம்பிய தலித் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, அவரது முதுகெலும்பு நொறுக்கப்பட்டு, நாக்கு துண்டிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, சின்னா பின்னாமாக்கப்பட்டு உள்ளார். ஆனால், அங்கு இருக்கும் அரசு இந்த வன்முறையை மூடி மறைக்க துடித்துக்கொண்டு இருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து உள்ளது. பசுமாடுகளை பாதுகாக்க துடித்துக்கொண்டு இருக்கும் ஒரு முதல்-மந்திரி அங்கு இருக்கும் பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க மறுக்கிறார்.

இந்த நாட்டில் உள்ள பெண்களை பாதுகாக்க எந்த மதமும் வந்து துணை நிற்காது. மனிதாபிமானம் உள்ள தலைவர்கள் மட்டும் தான் பாதுகாப்பார்கள். பெண்களுக்கு எதிரான இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். இந்த மனிதாபிமானமற்ற ஆட்சிக்கு துணைபோய் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்படும் நாள் விரைவில் வந்து கொண்டு இருக்கிறது"

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

``உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்மணியை ஜாதி ஆதிக்க மனப்பான்மையுடன் பாலின வன்கொடுமையைக் கட்டவிழ்த்துவிட்டு கொலை செய்ததுடன், அவரது சடலத்தைக்கூட அவரது பெற்றோர்களுக்குக்கூட காட்டாமல் நடுநிசியில் பெட்ரோல் ஊற்றி வயல்வெளியில் உ.பி. காவல்துறையே எரித்த கொடுமையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட அந்த ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்ணின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்கள் உ.பி. காவலர்கள் மிக மோசமாக, கீழே தள்ளியும், காங்கிரஸ் தொண்டர்களைத் தடியில் அடித்தும், அடுத்த நாள் சென்ற மேற்கு வங்க எம்.பி.க்களிடமும் ஆண் பெண் என்ற வேறுபாடு, நாகரிகம் பார்க்காமல் மிகவும் மூர்க்கத்தனமாய் நடந்து கொண்டதைக் கண்டித்தும், இன்று 5.10.2020 மாலை ஆளுநர் மாளிகையை நோக்கி மெழுகுவத்தி ஏந்தி பேரணியாகச் சென்ற தி.மு.க. எம்.பி.யும், மகளிர் அணிச் செயலாளருமான கவிஞர் கனிமொழி எம்.பி. அவர்களையும் உடன் சென்ற பொறுப்பாளர்களைக் கைது செய்து, ஆளுநரிடம் அந்த மனுவைக் கூட கொடுக்க தமிழக அரசு அனுமதிக்காததும், அவரைக் கைது செய்ததும் மிகவும் வன்மையாக கண்டனத்திற்கும் உரியதாகும். அவர்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கினை திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். 

உத்தரப்பிரதேச அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதைக் கண்டித்து- பாலியல் நீதி கேட்டு ஆளுநரிடம் மகளிர் பேரணி நடத்துவதைத் தடுத்து கைது செய்திருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது ஆகும். உடனடியாக அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என திராவிடர் கழகம் வற்புறுத்துகிறது"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.