வேளாண் சட்டங்கள் தொடர்பாக, தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட, தமிழகச் சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டிட வலியுறுத்தி முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தை தி.மு.கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. பி.கே.சேகர் பாபு, திரு. மாதவரம் சுதர்சனம், திரு. கே.எஸ்.இரவிச்சந்திரன், திரு. ப.தாயகம் கவி மற்றும் திரு. ஆர்.டி.சேகர் ஆகியோர் முதலமைச்சரின் செயலாளரிடம் வழங்கினர்.

அந்தக் கடிதத்தில், மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது :

``
06-10-2020

பெறுநர்

மாண்புமிகு திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள்,             

தமிழக முதலமைச்சர்

தலைமைச் செயலகம்

சென்னை – 600009

 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,

வணக்கம்.                             

பொருள்: நாடாளுமன்றம் இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட - சட்டமன்றத்தைக்  கூட்டுவது - தொடர்பாக.

“விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம்-2020 (சட்டம் 20 - 2020)” , “விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்- 2020 (சட்டம் 21 - 2020), “அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்- 2020( சட்டம் 22 -  2020) ஆகிய  வேளாண் சட்டங்கள் மூன்றையும் நாடாளுமன்றம் இயற்றியிருப்பது, நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் - குறிப்பாகத் தமிழக விவசாயிகள் மத்தியிலும் மிகப்பெரிய அதிருப்தி - எதிர்ப்பு அலைகளை உருவாக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் விவசாயிகள் இச்சட்டங்களை எதிர்த்துப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு என்றால், விவசாயிகள் நம் மாநிலத்தின்  உயிரோட்டமானதும் விலைமதிப்பற்றதுமான அரிய சொத்துகள்! அவர்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றிடும் கடமை உணர்ச்சியுள்ள மாநில அரசு மட்டுமே, அவர்களின் பாதுகாவலனாக இருக்க முடியும். அந்த அடிப்படையில், காலம் காலமாக - இடைத்தரகர்களிடமிருந்து காப்பாற்றி - விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை மாநில அரசுதான் உறுதி செய்து வருகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் (State List) இருக்கும் பொருள் 14-ல் (Entry) இருக்கும் “வேளாண்மை” (Agriculture) தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும் முழு அதிகாரமும் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. அதே போல் “நிலம் - நிலம் சார்ந்த சுவாதீன உடன்படிக்கை” (Land and Land Tenure) ஆகியவை மாநிலப் பட்டியல் 18-ல் இருக்கிறது. இவை தவிர, மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் 46, 47, 48 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகவும், ஒன்றோடு ஒன்று இணைத்தும் படித்துப் பார்த்தால் - வேளாண்மையைப் பொறுத்தமட்டில், சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே இருக்கிறது. ஆகவே இந்த அதிகாரத்திற்குள் நுழைந்து மத்திய அரசு சட்டமியற்றியிருப்பதை நாம் வெறுமனே வேடிக்கை பார்க்கவும் முடியாது; ஏற்றுக் கொள்ளவும் இயலாது.

அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் சாரத்தை மனதிலே கொண்டுதான் இந்த மூன்று சட்டங்களையும் எதிர்த்து ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த இரண்டு வேளாண் சட்டங்களுக்கும் எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன்.

விவசாயிகளுக்குக் கடுமையான நீண்டகாலப் பாதிப்பினை ஏற்படுத்தும் இச்சட்டங்கள் குறித்து விவாதித்து, உரிய தீர்மானம் நிறைவேற்றுவதற்காக உடனடியாகத் தமிழ்நாடு சட்டமன்றத்தைக் கூட்ட பரிந்துரை செய்யுமாறும்; “அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்- 2020 (சட்டம் 22 -  2020) உள்ளிட்ட இம்மூன்று சட்டங்களுக்கும் எதிராகத் தமிழ்நாடு அரசின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்றும்; தமிழக வேளாண்மை மற்றும் விவசாயப் பெருமக்களின் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்க, இந்த நடவடிக்கைகள் மிகமிக அவசரமும் அவசியமும் ஆகும் என்பதை அனைவரும் உணர்ந்திட வேண்டுமென்றும்; அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புள்ள,

மு.க.ஸ்டாலின்"

இவ்வாறு கூறியிருக்கிறார் அவர்.